தமிழ்நாட்டில் சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அமையவிருந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு விஜய் தலைமையிலான தற்போதைய அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் எதிர்ப்புகளால் தமிழ்நாட்டின் வான்வழி உள்கட்டமைப்பு வளர்ச்சி முடங்கிக் கிடக்கும் இதே வேளையில், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் ஒரே நேரத்தில் 9 புதிய விமான நிலையங்களை உருவாக்குவதற்கான பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிய முதலீடுகளை ஈர்க்கவும் அடுத்த தலைமுறை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் விமான நிலையங்களை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்.
இதற்காக, கடந்த ஜூன் 6, 2026 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ‘ஆந்திரப் பிரதேச விமானப் போக்குவரத்துக் கொள்கை 2026-31’ (APAP-2026) முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த மெகா ‘ஏவியேஷன் மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ் அமராவதி, குப்பம், தாகதார்த்தி, ஸ்ரீகாகுளம், தாடேபல்லிகூடம், நாகார்ஜுன சாகர், துனி-அன்னவரம், ஓங்கோல் மற்றும் பலாசா ஆகிய 9 முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அதிவேகமாக அமையவுள்ளன. ஒவ்வொரு சாமானியக் குடிமகனுக்கும் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் ஒரு விமான நிலையம் இருக்க வேண்டும் என்ற இலக்குடன் நீர்நிலை விமான தளங்கள் (Waterdromes) மற்றும் சிறிய ஓடுதளங்களும் அங்கு மேம்படுத்தப்படவுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த வான்வழிப் பயணிகள் போக்குவரத்தில் ஆந்திராவின் பங்களிப்பு வெறும் 1.5 விழுக்காடாக மட்டுமே உள்ள நிலையில், அதனை 2035-க்குள் 4 விழுக்காடாகவும், 2047-க்குள் 7 விழுக்காடாகவும் உயர்த்த ஆந்திர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான, நகரமயமாக்கப்பட்ட தொழில் துறை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிய போதிலும், பரந்தூர் போன்ற மெகா திட்டங்கள் தொடர்ந்து முடக்கப்படுவது மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் எனத் தொழில் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். ஆந்திரா வான்வழித் தொடர்பு மூலம் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் சர்வதேச முதலீடுகளையும் ஈர்க்கத் தயாராகிவிட்ட சூழல், ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
