தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2026 ஜனவரி முதல் தொடங்கி 2027-ஆம் ஆண்டில் நிறைவடைய உள்ளன. அதுவரை தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாத நிலையில் அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தக் கோரித் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இந்தத் தாமதத்தால் தமிழகத்தில் 2028-ஆம் ஆண்டுக்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில், 2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகே அடுத்தகட்ட தேர்தல் நடைமுறைகளைத் தொடங்க முடியும். குறிப்பாக, கணக்கெடுப்புக்குப் பின் வார்டு மறுவரையறை செய்வதற்கு 120 நாள்களும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை இறுதி செய்ய 30 நாள்களும், தேர்தலுக்கு முந்தைய நிர்வாக நடவடிக்கைகளுக்கு 90 நாள்களும் என மொத்தம் 240 நாள்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால அளவுகளையும் சேர்த்துக் கணக்கிடும்போது, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்ந்து தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கும் என்பதோடு, தேர்தலும் 2028-க்குப் பிறகே சாத்தியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
