உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி, ஹிடயத் நகர் பகுதியில் உள்ள ‘சில்ட்ரன்ஸ் அகாடமி’ என்ற பள்ளியில், பிஞ்சு குழந்தைகள் கண்ணெதிரே நடைபெற்ற கொடூர சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. அங்கு கடந்த ஒரு வருடமாக எல்கேஜி (LKG) வகுப்பிற்கு பாடம் நடத்தி வந்த 26 வயது நிரம்பிய நிஷாத் பாத்திமா என்ற ஆசிரியை, தனது முன்னாள் காதலனால் பள்ளி வளாகத்திலேயே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆசிரியையை சுட்டுக் கொன்ற அந்த நபர், அடுத்த நொடியே தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான முகமது சவுத் என்பவருக்கும் பாத்திமாவிற்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் உறவு இருந்து வந்துள்ளது. ஆனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாத்திமா அந்த உறவை முறித்துக் கொண்டு சவுத்திடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுத், பாத்திமாவைத் தொடர்ந்து தொந்தரவு செய்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாத்திமாவின் சகோதரர் ஷதாப் அக்தர் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும், சவுத்தின் தொந்தரவு குறையாத நிலையில், சம்பவத்தன்று காலை சுமார் 11.30 மணியளவில் பையில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை மறைத்து வைத்துக்கொண்டு அவர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். வகுப்பறையில் பாத்திமா குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, அவரது கையைப் பிடித்து பலவந்தமாக மேல் தளத்தில் உள்ள ‘சீனியர் கேஜி’ வகுப்பறை நடைபாதைக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மீண்டும் தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தி வாக்குவாதம் செய்த சவுத், பாத்திமா அதற்கு மறுத்ததால் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரது தலையில் சுட்டுள்ளார். இதில் பாத்திமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில், சவுத்தும் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
அடுத்தடுத்து கேட்ட 4 துப்பாக்கிச் சூடு சத்தங்களால் பதறிய மாணவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பள்ளி வளாகத்தைச் சுற்றி வளைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், பள்ளியில் இருந்த குழந்தைகளைப் பாதுகாப்பாக வெளியேற்றி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாத்திமாவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் சவுத்தின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஞ்சு குழந்தைகள் பயிலும் பள்ளிக்குள் ஆயுதங்களுடன் ஒரு நபர் எவ்வாறு நுழைந்தார் என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
