வாழ்வில் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குச் சம்பாதித்த பணத்தைத் திட்டமிட்டுச் சேமிப்பதும் முதலீடு செய்வதும் அவசியமாகும். இன்றைய இளைஞர்கள் கூடப் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதற்கு மாறாக, பெரிய அளவில் ஆபத்து இல்லாத முதலீட்டை விரும்பும் முதியோர் நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits – FD) திட்டங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். FD-களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். பொதுவாக, சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளைக் காட்டிலும் சற்று அதிக வட்டி விகிதங்களை வழங்குவது வழக்கம்.
தற்போது, எஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎப்சி போன்ற முன்னணி வங்கிகள் பொது வாடிக்கையாளர்களுக்கு சுமார் 6% முதல் 7% வரை வட்டி அளிக்கும் நிலையில், சில சிறிய வங்கிகள் 7% முதல் 8% அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. அதில் மூன்று வங்கிகளின் விவரங்கள் இங்கே:
-
சூர்யோதய ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 8.05% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 8.10% வட்டி அளிக்கப்படுகிறது. உதாரணமாக, ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ஐந்து ஆண்டுகளில் வட்டி மூலம் மட்டும் சுமார் ரூ.2.44 லட்சம் வருவாய் ஈட்டலாம்.
-
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: 5 ஆண்டு FD-க்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 8% வட்டி வழங்கப்படுகிறது. இதே திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 9% என்ற மிக அதிக வட்டி விகிதம் கிடைக்கிறது.
-
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு வருடத் திட்டத்திற்கு 6% மட்டும் வழங்கப்படுகிறது.
