தமிழ் சினிமா இயக்குனர் லிங்குசாமி. திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்துகிறார். தனது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து பல படங்களை லிங்குசாமி தயாரித்திருக்கிறார். தனியார் நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமி படம் தயாரிக்க 35 லட்சம் ரூபாய் கடனாக வாங்கிய நிலையில் கடனை அவர் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் கடனாக பெற்ற தொகையை 2 மாதங்களுக்குள் அவர்கள் திருப்பி செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காசோலை வழக்கில் நீதிமன்றம் எங்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கி உள்ளது. நாங்கள் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை சிலர் கூறி வருகிறார்கள். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று இயக்குனர் லிங்குசாமி அதில் கூறியிருக்கிறார்.
