“நாங்க இருக்கோம்…! மீண்டும் வருவோம்…!” – லண்டன் செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு உள்ளதால் நாள்தோறும் அண்ணா அறிவாலயம் வரத் தொடங்கியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அறிவாலயத்திற்கு நாள்தோறும் வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், “நாங்க இருக்கோம், நாம் மீண்டும் வருவோம்” என்ற ஒற்றை உணர்வுடன் தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார். வெற்றியைத் தலையில் ஏற்றாமலும், தோல்வியை இதயத்தில் தாங்காமலும் 75 ஆண்டுகளைக் கடந்து ஃபீனிக்ஸ் பறவை போல திமுக மீண்டெழுவதற்கு இந்தத் தொண்டர்களின் வலிமையே காரணம் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கழகம் அடுத்த நூறாண்டுகளுக்குப் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானிக்க, தொண்டர்களின் கருத்துகளை அறிய 38 பேர் கொண்ட 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. மேலும், “உடன்பிறப்பின் குரல்” என்ற இணையதளம் மூலமாகவும் பெறப்பட்ட எண்ணங்களின் அடிப்படையில், கழகத்தின் மறுகட்டுமானத்திற்காக இளமையும் அனுபவமும் கலந்த “மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு” தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கழக மாவட்டங்களின் மறுவரையறை, சார்பு அணிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள் மற்றும் மறுசீரமைப்பு குறித்த பரிந்துரைகளை வழங்கும் என்று அவர் விளக்கியுள்ளார்.

   

இந்தியாவிலேயே திமுகவைப் போன்ற கட்டமைப்பு மற்றும் அமைப்புரீதியான பலம் கொண்ட வேறு எந்தவொரு கட்சியும் கிடையாது என்பதை அரசியல் நோக்கர்களும் பிற மாநிலத் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தகைய பலம் வாய்ந்த இயக்கம் எழுச்சி பெற்று, அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான தமிழகத்தின் புதிய வரலாற்றை எழுத வேண்டும் என்பதே இலக்காகும். இந்த முக்கியப் பணிகளை எல்லாம் உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் தான் இருவார கால அயலகப் பயணம் மேற்கொள்வதாகவும், தான் வெளிநாட்டில் இருந்தாலும் தனது மனம் அறிவாலயத்திலும், தொண்டர்களின் முகங்களிலும்தான் இருக்கும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.