நேபாளத்தின் லேம்ஜங் மாவட்டத்தில் உள்ள தூங் கோலா பகுதியில் பிடிபட்ட சிறுத்தை ஒன்றுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, பெசிசஹாரில் உள்ள வன அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறுத்தையை சிறிய கூண்டில் இருந்து பெரிய அடைப்பிடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முயன்றனர். அப்போது, மயக்க நிலையில் இருந்த சிறுத்தை எதிர்பாராதவிதமாக விழித்துக்கொண்டு கூண்டை உடைக்கத் தொடங்கியது.
கூண்டின் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்துகொண்டு வெளியேறிய சிறுத்தை, அங்கிருந்த 57 வயதான புத்தி ஜங் குருங் என்ற வனக் காவலரைத் தாக்கி கீழே தள்ளியது. அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டவாறே உலோகக் கம்பியால் சிறுத்தையை விரட்ட முயன்றனர். இந்தத் திடீர் தாக்குதலில் அந்த வனக் காவலருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, தப்பித்த சிறுத்தை வன அலுவலக வளாகத்திற்குள் ஓடி தூண்களில் ஏற முயன்றது. வனத்துறை ஊழியர்களும் அதிகாரிகளும் தடுப்புகள் மற்றும் கூண்டுகளைப் பயன்படுத்தி சிறுத்தையைக் கட்டுப்படுத்தப் போராடினர். இச்சம்பவம் குறித்து தகவல் பரவியதும் பொதுமக்கள் அப்பகுதியில் கூடியதால், காவல்துறையினர் அவர்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி சிறுத்தையைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
