லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்த மேத்யூ தாமஸ் குடும்பம் விபத்தில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மேத்யூ தாமஸ் பல திரைப்படங்களில் பல நடிகர்களுக்கு மகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் திரிஷாவுக்கு மகனாக நடித்திருப்பார் மேத்யூ தாமஸ். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவரது குடும்பத்தில் இருக்கும் தந்தை, தாய், அண்ணன் உள்ளிட்ட பலரும் கொச்சியில் நடைபெற்ற குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று இருக்கிறார்கள். விழா முடிந்து வீடு திரும்ப கொண்டிருந்தபோது சாஸ்தாமுல் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கியது. இதில் மேத்யூ தாமஸின் உறவினரான தீனா டானியல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது தந்தை பிஜு, தாய் சூசன் மற்றும் அண்ணன் ஜான் ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அண்ணன் தான் காரை ஓட்டி சென்று இருக்கின்றார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விபத்துக்கு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் மேத்யூ தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் குணமாகி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.