தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு ஆட்சிக் காலங்களிலும் சிறப்பாகப் பணியாற்றிய அவருக்கு, வரும் நவம்பர் மாதம் வரை பணி நீட்டிப்பு காலம் இருந்த நிலையிலும், திடீரென தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார். புதிய த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை எவ்விதப் பிரச்சினையுமின்றி வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் இவருக்கு முக்கியப் பங்கு இருந்தது.
அவரது இந்த திடீர் முடிவுக்குப் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்கெடுப்புக்குப் பிறகு புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனப் பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார். இதனால் அவர் முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமாகிவிடுவார் என எண்ணிய இரண்டு அமைச்சர்கள், சீனிவாசனை ஒருமையில் பேசி அவமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலால் மனமுடைந்தே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
