அடடா… தியேட்டருக்கே கூட்டிட்டு போகும் ஓனர்…! ‘ஜனநாயகன்’ பார்க்க ஊழியர்களுக்கு லீவ் கொடுத்து சர்ப்ரைஸ்…! திருப்பூர் நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு…!!

By Swetha on ஆடி 22, 2026

Spread the love

பிரபல நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’, பல்வேறு சென்சார் பிரச்சனைகளைக் கடந்து நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல் வருகை காரணமாக சினிமா துறையிலிருந்து விஜய் விலகும் சூழலில், திரையில் ‘மாண்புமிகு முதலமைச்சர் விஜய்’ என்ற டைட்டில் கார்டுடன் வெளியாகும் இப்படத்தைக் காண ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், திருப்பூரில் மூன்று கிளைகளுடன் இயங்கி வரும் ‘ஃபுட்ஸ் பை டிகே சென்ட்ரல் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ்’ தனது ஊழியர்களுக்கு ஜூலை 23 அன்று அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. விஜய்யின் திரைப் பயணத்தின் இறுதித் திரைப்படத்தை ஊழியர்கள் அனைவரும் திரையரங்கில் ஒன்றிணைந்து முதல் நாள் மாலைக் காட்சியைக் காண்பதற்காக இந்தச் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

   

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “சில நட்சத்திரங்கள் நம்மை மகிழ்விக்கின்றன; சில ஜாம்பவான்கள் ஒரு தலைமுறையையே வடிவமைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், நமது குழந்தைப்பருவம், கனவுகள் மற்றும் வாழ்வின் நோக்கத்திற்கு உத்வேகம் அளித்த விஜய்யின் 183 நிமிடங்கள் கொண்ட இந்த இறுதி சினிமாப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நிறுவனம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.