லதா ரஜினிகாந்தின் ‘மக்கள் இயக்கம்’ சார்பில் செங்கல்பட்டு பகுதியில் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிறுவனராகக் கலந்துகொண்ட லதா ரஜினிகாந்த், கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், யோகா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கிச் சிறப்பித்தார். கிராமங்கள் தோறும் பெண் குழந்தைகளின் கல்வி விழிப்புணர்வு, விவசாய நிலப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதே இவ்வியக்கத்தின் முதன்மை நோக்கம் என்று அவர் உரையாற்றினார்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களையும் 6 மண்டலங்களாகப் பிரித்து இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கைவினைப் பொருட்கள் பயிற்சி மற்றும் விற்பனைக் கூடங்களை அமைப்பதுடன், மக்கள் ஒன்று கூடித் தங்கள் பிரச்சினைகளைக் கையாளவும் நாட்டுப்பற்றை வளர்க்கவும் ‘மக்கள் மேடை’ வழிகாட்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே இவ்வியக்கத்தின் செயல்பாடுகள் திட்டமிடப்பட்டு விரிவாக்கப்பட்டு வருகின்றன.
இவ்வியக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த், இது அரசியலுக்கான களம் அல்ல என்றும், முழுக்க முழுக்க மக்கள், பெண் குழந்தைகள், விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களின் வளர்ச்சிக்காகச் செயல்படும் தளம் என்றும் தெளிவுபடுத்தினார். தமிழக அரசியல் சூழல் மற்றும் பிற பிரபலங்களின் அரசியல் வருகை குறித்த கேள்விகளுக்கும், இது அரசியல் இயக்கம் அல்ல, மக்களுக்கான இயக்கம் மட்டுமே என்று கூறி அவர் புன்னகையுடன் பதிலளித்தார்.
