ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு நீக்குங்க… மனைவி, மாமியாருக்கு போதைப்பொருள் வழக்கில் தொடர்பு… டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி..!

By Soundarya on ஆனி 10, 2026

Spread the love

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி மற்றும் அவரது மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜான் பிரிட்டோ என்பவர் பல ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பணப் பரிவர்த்தனை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜான் பிரிட்டோ, லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் டெய்சி ஆகியோர் மீது கேரளாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணசாமி, இவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஊழல் மற்றும் போதைப்பொருள் இல்லாத ஆட்சியைத் தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், தனது அமைச்சரவையில் ஆதவ் அர்ஜுனாவைத் தொடர அனுமதிப்பது சரியா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

   

இறுதியாக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் நிரபராதித் தன்மையை நிரூபிக்கும் வரை, ஆதவ் அர்ஜுனாவை அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.