கடந்த 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாளை அரசு வேலைக்கான ஆணைகளை நேரடியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். விஜய்யின் இந்த நடவடிக்கைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது திமுகவை விமர்சிக்க விஜய் பயன்படுத்திய “ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க” என்ற அதே வசனத்தை வைத்தே, “அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யக்கூடாது” என விஜய்யை கிருஷ்ணசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட செயலா அல்லது விபத்தா என்ற விடை இன்னும் கிடைக்காத நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள இந்த வழக்கில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரே மிக முக்கியச் சாட்சிகளாக உள்ளனர். இத்தகைய சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கினால், அவர்கள் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாமல் ‘பிறழ் சாட்சிகளாக’ மாற அதிக வாய்ப்புள்ளது என்று கிருஷ்ணசாமி சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடும் என்றும், 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் போய்விடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த சிபிஎம் கட்சியே, கரூர் வழக்கில் அரசு வேலை வழங்குவது சரியாக இருக்காது என தவெக அரசின் முடிவை ஏற்கனவே விமர்சித்துள்ளது. இந்த நிலையில், அரசுப் பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சாட்சிகளைப் பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். எனவே, கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நாளை அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
