கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் போட்டியிட்டார். இத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக களம் இறங்கிய வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்தும், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றபோது, பல இயந்திரங்களில் பாதுகாப்பு சீல்கள் சரியாக இல்லை எனவும், புதிய டேக்குகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் திமுக குற்றம்சாட்டியது. குறிப்பாக, சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட 14 இயந்திரங்களில் 2 இயந்திரங்கள் உடனடியாக செயல்படாமல் போனதாகவும், சில வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் தீவிர முறைகேடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் திமுக வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதனால் கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே சரிபார்ப்புக்கு விண்ணப்பித்தும், தேர்தல் ஆணையம் 45 நாட்கள் கழித்தே சரிபார்ப்பு பணியை முடித்ததால் தேர்தல் வழக்கு தொடர காலதாமதம் ஏற்பட்டதாக வாதிட்டார். மாறாக, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-வின் தேர்வை எதிர்த்து தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவின் ஏற்புடைமை குறித்து தீர்ப்பளிப்பதாக கூறி, தேதியை குறிப்பிடாமல் உத்தரவை ஒத்திவைத்தனர். அதேவேளையில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் திருத்தப்பட்ட விதிகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தற்போதுள்ள மனுவை திரும்ப பெற்றுக்கொண்டு புதிய வழக்கை தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பு கோரிய அனுமதியை ஏற்று, மனுவை திரும்ப பெறவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
