பஞ்சாப் மாநிலம் தரன் தரன் மாவட்டத்தில், ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த காதல் திருமணத்தின் காரணமாக அரங்கேறியுள்ள ஆணவக் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருபத்தி இரண்டு வயதான ஜக்ஜித் சிங் என்ற இளைஞர், தனது காதலியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தை துளியும் ஏற்காத பெண்ணின் வீட்டார், அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அப்பெண்ணின் தாய் திட்டமிட்டு ஜக்ஜித் சிங்கை ஒரு பேருந்து நிலையத்திற்கு வரவழைத்துள்ளார்.
அங்கு அவர் வந்திறங்கியதும், ஏற்கனவே பதுங்கியிருந்த பெண்ணின் அண்ணன்களான ஜஸ்பிரீத் சிங் மற்றும் ஹர்பிரீத் சிங் ஆகியோர் ஜக்ஜித் சிங்கை ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கொலையாளிகளில் ஒருவனான ஜஸ்பிரீத்தை உடனடியாகக் கைது செய்தனர். அங்கிருந்து தப்பிச் சென்ற மற்றொரு சகோதரனைத் தேடி வரும் போலீசார், இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
