கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாக்கு சரிபார்ப்புப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், எந்தவித முறைகேடுகளோ அல்லது குளறுபடிகளோ கண்டறியப்படவில்லை என இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் முறைப்படி தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றி பெறும்பான்மையாக உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறி அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.எஸ். பாபு, தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், இத்தகைய அவதூறுகளைத் தாம் சட்டரீதியாகவே உறுதியோடு எதிர்கொள்ளப்போவதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
