திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர்கள் கே.என். ரவிச்சந்திரன், கே.என். மணிவண்ணன் உட்பட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகராட்சி திட்டங்களின் டெண்டர்களில் சுமார் 1,020 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது இல்லம், சென்னை, கோவை என அவருக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய 19 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, மொத்த திட்ட மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சமாகப் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் கே.என். நேருவின் உறவினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் இதில் முக்கியப் பங்காற்றி, கோடிகளில் கைமாறிய பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து வந்ததாக அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில் கிடைத்த டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ளிட்ட ஆதாரங்கள் கடந்த ஆண்டே தமிழ்நாடு டிஜிபிக்கு அனுப்பப்பட்டிருந்தன. இருப்பினும், அப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் தாமதமாகி வந்த நிலையில், தற்போதைய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. மேலும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்தது மற்றும் நெல்லையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றிற்காக அதிகாரிகளிடமிருந்து ரூ.43 லட்சம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களும் இந்த விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வழக்கின் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் முதல்நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கே.என். நேருவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் வேலுமணியிடமிருந்து, திமுக ஆட்சிக் காலத்தில் கமிஷன் தொகையாகப் பெறப்பட்ட ரூ.19.77 கோடியை ரமேஷ் என்பவர் பெற்று ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்ததாக அமலாக்கத்துறை சான்றளித்துள்ளது. இந்தத் தொடர் சோதனைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
