தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் 700 மதுபானக் கடைகளை மூடுவதாக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்ததுடன், டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகளைக் களையெடுக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கியது. குறிப்பாக, மதுப் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என அரசு ஊழியர்களுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இருப்பினும், சரக்கு பாட்டில்களை ஏற்றுவது மற்றும் இறக்குவதற்கான கூலி, குடோன் பராமரிப்புச் செலவுகள், ஊழியர்களுக்கான கூடுதல் ஊதியம் போன்ற நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி, டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் தொகையைத் தொடர்ந்து வசூலித்தே வந்தனர்.
இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்த போதிலும், கள நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பல டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாகத் தினமும் வாக்குவாதங்கள் முற்றி, அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அரசின் உத்தரவு ஏட்டளவில் மட்டுமே இருக்கிறதே தவிர, நடைமுறையில் மதுப் பிரியர்களிடம் கூடுதல் பணம் வசூலிப்பது தடையின்றித் தொடர்வது பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அரசை கடுமையாகச் சாடினார். “பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அதைத் தடுக்கத் தவறியது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “எங்கள் ஆட்சிக்காலத்தில் ஏற்றுக்கூலி, சணல் செலவு எனக் கூறியபோது அதை ஊழல் என்றீர்கள்; ஆனால் இப்போது உங்கள் ஆட்சியில் அது நியாயமாக்கப்பட்டு, கூடுதல் கட்டணம் 20 ரூபாயாக உயர்ந்துள்ளதே, இது எப்படி நியாயமாகும்?” எனச் சட்டசபையில் காரசாரமாக கேள்வி எழுப்பினார்.
