ரூ.634 கோடி நியமன முறைகேடு வழக்கு…. கே.என்.நேருவுக்கு சிக்கலா?…. சென்னை உயர் நீதிமன்றம் நாளை அளிக்கும் அதிரடி தீர்ப்பு….!

By Nanthini on ஐப்பசி 25, 2026

Spread the love

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்தில் சுமார் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. அந்த கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் கடிதத்தின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தனது உரிமையைப் பாதிப்பதாகக் கூறி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நேருவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “முந்தைய உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காததால் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது; மேலும், வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக முந்தைய அரசு எடுத்த நிலையைத் தற்போதைய அரசு தன்னிச்சையாக வாபஸ் பெற முடியாது” என வாதிட்டார்.

   

இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், “அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாகப் போதிய ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியும், முந்தைய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கே.என்.நேருவைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது பதிலளிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டும், அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது இந்த மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

   

அனைத்துத் தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீதான முக்கியத் தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு நாளை (அக்டோபர் 26) காலை வழங்கவுள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலிலும், அரசுப் பணி நியமன முறைகேடு தொடர்பான விசாரணைகளிலும் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.