கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையம் உதயம் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுப்பிரமணி என்பவரின் மகன் அஸ்வின் (22). இவர் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ் (16) மற்றும் மாதேஷ் (22) ஆகியோருடன் சேர்ந்து, விக்னேஷ் என்பவரின் வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில், ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகராறில் ஆத்திரமடைந்த சகோதரர்களான தினேஷும் மாதேஷும் இணைந்து, அதிகாலை சுமார் 01.45 மணியளவில் அஸ்வினை சுத்தியலால் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், கத்தியால் அவரது கழுத்தை அறுத்ததில் அஸ்வின் சம்பவ இடத்திலேயே கொடூரமான முறையில் உயிரிழந்தார். குற்றத்தைச் செய்த பிறகு இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அஸ்வின் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள், உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர், அஸ்வினின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சுத்தியலால் அடித்தும், கழுத்தறுத்தும் படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
