“நா அப்படியே ஷாக் ஆகிட்ட… அவங்கள பார்த்து வாய் அடைச்சு போய்ட்டேன்…!” சில்க் ஸ்மிதா குறித்து ஓபனாக பேசிய குஷ்பூ…!!

By Swetha on ஆடி 22, 2026

Spread the love

தென்னிந்திய சினிமாவில் நடிகை சில்க் ஸ்மிதா ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்த வெற்றிடத்தை இன்றளவும் எந்தவொரு நடிகையாலும் நிரப்ப முடியவில்லை. 80ஸ் கிட்ஸ் முதல் இன்றைய 2கே கிட்ஸ் வரை அனைவரின் ஃபேவரைட்டாக இருக்கும் அவர், வெறும் கவர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தாமல் தனது வசீகரிக்கும் பார்வை, பேச்சு மற்றும் தனித்துவமான நளினத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டார். இதன் காரணமாகவே அன்றைய முன்னணி ஸ்டார் நடிகர்களும் அவருடன் இணைந்து நடிக்க வரிசையில் காத்திருந்தனர்.

பணமும் புகழும் உச்சத்தில் இருந்தபோதிலும், சில்க் ஸ்மிதாவைச் சுற்றி நல்ல மனிதர்கள் அமையாததால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வாழத் தொடங்கினார். அவர் தனக்கென அமைத்துக் கொண்ட கட்டுப்பாடுகளை சிலர் ‘தலைக்கனம்’ என்று தவறாகப் புரிந்துகொண்டனர். இறுதியில் தீவிரக் காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டது திரை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் இறந்த பிறகும், மருத்துவமனை பிணவறையில் அவரது உடலுக்கு நேர்ந்த கசப்பான சம்பவங்கள் வரை அவரது வாழ்க்கை மிகுந்த சோகம் நிறைந்ததாகவே முடிந்தது.

   

அவர் மறைந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும், அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருவதுடன் அவர் பற்றிய செய்திகளும் இன்றும் மக்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகை குஷ்பூ, சில்க் ஸ்மிதா குறித்துப் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தானும் அர்ஜுனும் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் சில்க் ஸ்மிதா கம்பீரமாக நடந்து வந்ததைக் கண்டு வியப்பில் வாய் பிளந்து பார்த்ததாகவும், தனது வாழ்நாளில் தான் அப்படி ஆச்சரியத்துடன் பார்த்த ஒரே ஸ்டார் சில்க் ஸ்மிதா மட்டும்தான் என்றும் குஷ்பூ பகிர்ந்துள்ளார்.