அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்குக் கட்சியின் தலைவர் விஜய் முக்கியப் பொறுப்புகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மூத்த நிர்வாகிகளான இருவருக்கும் கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் இந்த புதிய பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கரூர் மாவட்ட அமைப்பாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளராக சி. விஜயபாஸ்கரை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார். தங்களின் சொந்த மாவட்டங்களிலேயே இவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அங்கு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் இவர்கள் உடனடியாக ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் பணியாற்றிய நீண்ட கள அனுபவம் கொண்ட இவர்களின் வருகை, தவெகவிற்கு அந்த மாவட்டங்களில் பெரும் பலத்தை சேர்க்கும். சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பொறுப்புகள் தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
