Startup
தேங்காயை வைத்து இத்தனை பொருட்கள் விற்பனை செய்ய முடியுமா…? சாதித்து வரும் கேரள பெண்மணி…
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் புதுவித சிந்தனைகளும் இருந்தால் எந்த ஒரு தொழிலும் ஜெயிக்கலாம். அப்படி தேங்காயை ஒரு தொழிலாக கையில் எடுத்து தேங்காய் மூலம் கிடைக்கும் பொருட்களை வியாபாரம் ஆக்கி சாதித்து வருகிறார் கேரளத்தை சேர்ந்த சுமிலா ஜெயராஜ் என்ற பெண்மணி. அவர் என்ன செய்தார் என்பதை பற்றி இனி காண்போம்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சுமிலா ஜெயராஜ் விலங்கியல் பட்டப்படிப்பை முடித்தவர். திருமணம் ஆகிய குழந்தைகளை பெற்ற பிறகு ஏதாவது செய்ய வேண்டும் என்று சுமிலா ஜெயராஜுக்கு தோன்றி கொண்டே இருந்தது. பின்னர் தென்னையை சார்ந்த ஒரு உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியில் சேர்ந்தார் சுமிலா ஜெயராஜ்.
மூன்று வருடங்களில் தேங்காய் பற்றிய முழு தகவலையும் அறிந்து கொண்டார். தேங்காய் எவ்வாறு பெறப்படுகின்றன பதப்படுத்தப்படுகின்றன இறுதியில் விற்கப்படுகின்றன என்பதை பற்றியும் புரிந்து கொண்டார். தென்னையின் மீதான அவரது ஆர்வம் வளர்ந்து கொண்டே இருந்தது. அதை வைத்து ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று சுமிலா முடிவு செய்தார்.
பின்னர் சுமிலா ஒரு குழுவை நிறுவி வெர்ஜின் தேங்காய் எண்ணெய் என்ற முதல் ப்ராடக்ட்டை தயாரித்தார். அதற்கு பிறகு கேரளாவைச் சேர்ந்த சான்றளிக்கப்பட்ட மருத்துவரை தொடர்பு கொண்டு அவர்களின் தேங்காய் பற்றிய ஆவணப்படத்தில் இடம்பெறச் செய்தார். புற்றுநோய்க்கு எதிராக தேங்காய் எவ்வாறு சிறந்த தடுப்பு நடவடிக்கையாக உள்ளது என்பதை பற்றி மருத்துவர் விரிவாக பேசி அந்த வீடியோ வெளிநாடுகளில் பரவி இவர்களுக்கு ஆர்டர்களை பரவலாக வருவதற்கு உதவி செய்தது.
பின்னர் சுமிலா ஜெயராஜ் மிகக்குறைந்த நிதி சேமிப்புடன் தேங்காய் பதபடுத்தும் யூனிட்டை தன் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறிய இடத்தில் கிரீன் நெட் இன்டர்நேஷனல் என்ற பிராண்டை தொடங்கினார். ஒரு சில கிராமப்புற பெண்கள், பொருட்களை விநியோகிக்க ஒரு ஓட்டுநர் ஆகியவர்களை மட்டுமே கொண்டு தனது முதல் அடியை எடுத்து வைத்தார் சுமிலா ஜெயராஜ்.
2012 முதல் 2017 வரை கடுமையாக உழைத்த சுமிலா ஜெயராஜ் 2020 ஆம் ஆண்டு ஒரு நிலத்தை வாங்கி புதிய உற்பத்தி யூனிட் அமைத்தார். 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலம் முடிவடைந்து க்ரீன் பின் ஆறா இன்டர்நேஷனல் என்ற புது பெயருடன் ஸ்டேட் வங்கியில் 74 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார் சுமிலா ஜெயராஜ்.
அதை வைத்துக்கொண்டு சுமிலா ஜெயராஜ் மற்றும் அவரது குழுவினர் தேங்காய் பால், வெர்ஜின் தேங்காய் எண்ணெய், தேங்காய் தண்ணீர் வினிகர், தேங்காய் சாம்பார் பொடி, சட்னி பவுடர் மற்றும் தேங்காய் லட்டு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினர். இந்த நிறுவனம் முக்கியமாக அமேசான் மற்றும் இந்தியா மார்ட் மூலம் விற்பனையை செய்து வருகிறது. ஆரம்பத்தில் கிரீன் ஆரா இன்டர்நேஷனல் தேங்காய் சார்ந்த பொருட்கள், உள்நாட்டு பல்பொருள் அங்காடிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது நகரங்களில் சில்லறை விற்பனை கடை அளவுக்கு விரிவடைந்துள்ளது. தற்போது கடுமையாக உழைத்த ஜெயராஜ் 2000 சதுர அடியில் ஒரு தொழில் யூனிட்டை வாங்கி உள்ளார். இனி அடுத்ததாக கிரீன் ஆரா இன்டர்நேஷனல் பிரண்டை கொண்டு 100% இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்கள், ஆரோக்கிய பொருட்களை பிரத்தியேகமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே எதிர்கால லட்சியம் என்று கூறுகிறார் சுமிலா ஜெயராஜ்.