நடிகர் ரவி மோகனின் விவாகரத்திற்குப் பாடகி கெனிஷா தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். தன்னைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்கள், தான் யார் என்பதைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தன் வாழ்க்கையில் சந்தித்த துயரமான பக்கங்களைப் பகிர்ந்துள்ளார். சிறு வயதிலேயே உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், இளம் வயதிலேயே திருமணமானதாகவும் அவர் அந்த வீடியோவில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தன் திருமண வாழ்க்கையில் கணவரால் தாக்கப்பட்டதால், தனது வயிற்றில் இருந்த நான்கு மாத சிசுவை இழந்ததாகக் கெனிஷா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரையும், தன் குழந்தையையும் இழந்து தவிக்கும் தான், இன்னொருவருடைய குடும்பத்தைப் பிரிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். ரவி மோகன் ஒன்றும் குழந்தை அல்ல என்றும், அவர் யாருடன் பழக வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு என்றும், இதில் தன்னைக் தேவையற்று இழுக்க வேண்டாம் என்றும் அவர் சாடியுள்ளார்.
https://www.instagram.com/reel/DYUrZLZzYNH/?utm_source=ig_web_copy_link
யார் என்று தெரியாமலேயே ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பிப் பணம் சம்பாதிப்பதை விடுத்து, உலகில் நிலவும் போர், பஞ்சம் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகக் குரல் கொடுங்கள் என்று இணையவாசிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னைச் சுற்றித் தொடர்ந்து வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்த கெனிஷாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
