தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள சூழலில், தேர்தல் காலத்திலிருந்தே அவரது குடும்ப வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்த வதந்திகள் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதாவுடனான கருத்து வேறுபாடு மற்றும் விவாகரத்து மனுத் தாக்கல் செய்ததாக வெளியான செய்திகள் விஜய்யின் தனிப்பட்ட இமேஜைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த விமர்சனங்களைத் தாண்டி தேர்தலில் அவர் பெரும் வெற்றி பெற்றதோடு, பெண்கள் மத்தியிலும் அவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது தற்போது நிரூபணமாகியுள்ளது.
இந்த சர்ச்சைகள் குறித்துப் பேசிய விஜய்யின் சித்தி ஷீலா, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகப் பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். யூடியூப் போன்ற தளங்களில் வருமானத்திற்காக மற்றவர்கள் மீது இது போன்ற அவதூறுகளைப் பரப்புவது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இத்தகைய செய்திகளைப் பார்த்து தான் மனவேதனை அடைந்ததாகவும், பின்னர் அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று அவற்றைக் கடந்து செல்லப் பழகிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விஜய்யின் தாயார் ஷோபா இத்தகைய தேவையற்ற வதந்திகளைத் திரும்பிப் பார்க்கக் கூட மாட்டார் என்றும், குடும்பத்தினர் இதில் தெளிவான மனநிலையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். விஜய் சிறு வயது முதலே அமைதியான சுபாவம் கொண்டவர் என்றும், அவர் இன்று முதலமைச்சராக உயர்ந்திருப்பதை எண்ணி பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்த ஷீலா, பதவியேற்பு விழாவில் விஜய்யைப் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களையும் அந்தப் பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
