“திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்”… காங்கிரஸை ஓரங்கட்டுகிறதா ஆம் ஆத்மி?… அண்ணா அறிவாலயத்தில் நடந்தது என்ன?…!!!

By Rajeshwari on பங்குனி 4, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவினருடன் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தலைமையிலான நிர்வாகிகள் திடீர் சந்திப்பு நடத்தினர்.

ஏற்கனவே 21 கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி தொகுதி எண்ணிக்கையில் பிடிவாதம் காட்டி வரும் சூழலில் ஆம் ஆத்மி கட்சியுடனான இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வசீகரன், பாஜகவின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தும் ஆற்றல் திமுகவிற்கு மட்டுமே உள்ளதாகவும், தங்களுக்குத் தகுந்த அங்கீகாரத்தை திமுக வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

   

இதனால் தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, தமிழகத்திலும் திமுகவுடன் கைகோர்ப்பது ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறினால், ஆம் ஆத்மிக்கு இடம் அளிப்பதன் மூலம் தேசிய அரசியலில் திமுகவின் செல்வாக்கை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிடுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

   

மேலும், ஊழல் வழக்குகளில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நிலவும் இணக்கமான சூழல் இக்கூட்டணி முயற்சிக்கு வலுசேர்க்கிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து வரவும் ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது, இது வரும் தேர்தலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.