அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள நேரடிப் போரினால் ஈரானில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியதிலிருந்து செவ்வாய்க்கிழமை மதியம் வரையிலான காலப்பகுதியில், 181 குழந்தைகள் உட்பட மொத்தம் 1,097 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் சுமார் 5,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு, அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள இந்த உயிரிழப்பு விபரங்கள் முதற்கட்ட அறிக்கையே என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தனது முழுப் பலத்தையும் பிரயோகிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், விரைவில் மூன்றாவது அலை தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தீவிரமடைந்து வரும் மோதலினால் ஈரானில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதோடு, அப்பகுதியின் பொருளாதார மையங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
