நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது திருமணத்திற்கு ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷின் வீட்டில் சம்மதம் பெற சில பிரச்சனைகளையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
தனது பிளஸ் 2 படிப்பிற்குப் பிறகு 2009-ஆம் ஆண்டு ஆண்டனியைச் சந்தித்ததாகக் கூறிய கீர்த்தி சுரேஷ், தனது காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரிந்த சுவாரஸ்யமான சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார். கல்லூரிக் காலத்தில் இவர் எழுதிய டைரியை இவரது அம்மா எடுத்துப் படித்ததன் மூலமே இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு டைரி எழுதும் பழக்கத்தையே கைவிட்டுவிட்டதாகக் கூறும் கீர்த்தி சுரேஷ், அந்த டைரி தற்போது எங்குள்ளது என்று தெரியவில்லை என்றும், ஒருவேளை தனது அம்மா அதை எரித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தான் நடிகையாவதற்கு முன்பிருந்தே இருவரும் ஒன்றாக வளர்ந்து காதலித்து வந்ததால், காதலை ரகசியமாக வைப்பதில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், திருமணத்திற்குப் பிறகு பொதுவெளியில் கேமராக்கள் மற்றும் ஊடகங்களின் வெளிச்சம் குறித்து தனது கணவர் சற்று பதற்றமும் மனஅழுத்தமும் அடைந்ததாக கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
