தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் கீர்த்தி சுரேஷ், கடந்த 2024 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் தனது காதல் ரகசியங்களை அவர் பகிர்ந்துள்ளார். ‘ஆர்குட்’ சமூக வலைத்தளம் பிரபலமாக இருந்த காலத்தில் நட்பாக அறிமுகமான இவர்கள், ஒரு மாதம் சாட்டிங் செய்த பிறகே முதன்முதலாக நேரில் சந்தித்துள்ளனர். குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது, தற்செயலாக அங்கு வந்த ஆண்டனியைப் பார்த்து, சுற்றிலும் உறவினர்கள் இருந்ததால் பேச முடியாமல் வெறும் கண்ணசைவோடு மட்டும் கடந்து சென்றதே இவர்களின் முதல் சந்திப்பாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் விடுத்த சவாலை ஏற்று ஆண்டனி தட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது காதலைத் தெரிவித்துள்ளார். எனினும், இந்தத் திருமண பந்தத்தை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவிக்க அவர்களுக்கு 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. காதலின் அடையாளமாக ஆண்டனி பரிசளித்த மோதிரத்தை கீர்த்தி சுரேஷ் இதுவரை தனது கையை விட்டு கழற்றியதே இல்லை என்றும், பல திரைப்படக் காட்சிகளில் கூட அந்த மோதிரத்துடனேயே தான் நடித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை விட 7 வயது மூத்தவரான ஆண்டனி, ஆரம்பத்தில் கத்தாரில் 6 ஆண்டுகள் பணிபுரிந்தபோது இருவராலும் நேரில் சந்திக்க முடியாமல், எப்போதாவது பேசும் சூழலே இருந்துள்ளது. ஒருகட்டத்தில், வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற பயத்தில் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போகக்கூட திட்டமிட்டதாகவும், ஆனால் கொரோனா ஊரடங்கு காலம் தங்களது காதலை மேலும் வலுப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். “ஆண்டனிக்கு என்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சது அவரோட அதிர்ஷ்டம்னு எல்லாரும் சொல்றாங்க, ஆனா அவரை கணவரா அடைய நான் தான் ரொம்ப கொடுத்து வச்சவள்” என்று நெகிழ்ச்சியோடு கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.
