தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரு துறைகளில் தனி முத்திரைப் பதித்தவர் கரு பழனியப்பன். அதை எல்லாம் விட அவரை வெகுஜனத்திடம் கொண்டு சேர்ததது அவரின் சுவாரஸ்யமான பேச்சாற்றல்தான். எந்த ஒரு விஷயத்தையும் கேட்பவர்களைக் கட்டிப்போடும் அளவுக்கு பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் கரு பழனியப்பன்.
அவர் தமிழ் சினிமாவில் பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கரு பழனியப்பன். அதன் பின்னர் அவர் இயக்கிய படங்களான சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் ஆகிய படங்கள் அவருக்கு என்று ஒரு அடையாளத்தைப் பெற்றுத்தந்தன.
அதன் பின்னர் அவர் மந்திரப் புன்னகை என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்தார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. அதன் பின்னர் அவர் சினிமா வாழ்க்கையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் இயக்கிய நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை.
இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அவர் பணியாற்றி வருகிறார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா ,இந்த நிகழ்ச்சி நீயா நானா போல ஒரு விவாத நிகழ்ச்சியாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘நேர்ப்பட பேசு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தனக்கு சத்யஜோதி நிறுவனத்தில் எப்படி படம் இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது எனப் பேசியுள்ளார். அதில் “எனக்கு சத்யஜோதி தியாகராஜன் சாரை மிகவும் பிடிக்கும். அவரிடம் நான் ஒரு நண்பர் போல பேசிக்கொண்டிருப்பேன். நான் இயக்குனர் ஆவதற்கு முன்பும் என்னை மரியாதையுடன் நடத்தியவர் அவர்.
ஒரு நாள் நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது ‘இப்போது சினிமா சரியில்லை’ என்றார். ‘அதை நீங்க சொல்லாதீங்க. ஏன் என்றால் நீங்க இப்ப படமே எடுப்பதில்லை’ என்றேன். நான் எவ்வளவு படம் எடுத்திருக்கிறேன் தெரியுமா?’ என்று கேட்டார். நான் ‘அதெல்லாம் இருக்கட்டும் இப்போது படம் எடுக்கிறீர்களா?’ உடனே ‘அப்படியா? நான் ஒரு படம் எடுக்கிறேன். நீ இயக்கு” என்றார். அப்படிதான் ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் தொடங்கியது.” எனக் கூறியுள்ளார்.
