மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்ட சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துத் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். திமுக – பாஜக இடையே கூட்டணி அமைவதற்குக் கூட வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தொகுதி மறுசீரமைப்பு (De-limitation) எனும் வலையில் தமிழகம் சிக்கக்கூடும் என்றும் எச்சரித்தார். மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக அமல்படுத்திய தமிழ்நாட்டிற்கு இந்த தொகுதி மறுசீரமைப்பின் மூலம் அநீதி இழைக்கப்பட்டால், அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான உறவு நிலவுவது வரவேற்கத்தக்கது எனக் கூறிய அவர், தமிழக அரசின் ‘தாய்மாமன் திட்டம்’ குறித்துப் பேசுகையில், குழந்தைகளுக்குத் தங்க நகை வழங்குவதை விட, அந்தத் தொகையைக் காசோலையாகவோ அல்லது மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-ஆக உயர்த்தியோ வழங்கினால் பெற்றோருக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்கும் திட்டத்தைச் சுட்டிக்காட்டிய அவர், டெல்லியில் உள்ள பல எம்பிக்களுக்கே கார் வசதி இல்லாத சூழலில், கிராமப்புறங்களில் இருந்து வரும் எம்எல்ஏக்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என ஆதரவு தெரிவித்தார்.
தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றி கழகம் குறித்துப் பேசிய அவர், தவெக கட்சி நிர்வாகிகள் தங்களின் விருப்பத்தின் பேரில் அக்கட்சித் தலைவரை அடுத்த பிரதமர் எனக் கூறி வருவதாகவும், எந்தவொரு புதிய கட்சியும் பாதுகாப்பற்ற தன்மையுடன் (Insecure) செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். இந்த அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரத்தில், நடிகர் விஜய், தனுஷ் அல்லது சிம்புவின் திரைப்படங்களை தான் பார்ப்பதில்லை என்றும் செய்தியாளர்களின் கேள்விக்குச் சிரித்தபடியே பதிலளித்தார்.
மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி வேறு கட்சிகளில் இணைவது குறித்துக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்த கார்த்தி சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி மூன்று மாதங்களுக்குள் கட்ச மாறுவது தொகுதி மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றார். அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெக உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைவதைக் கண்டித்த அவர், அவ்வாறு கட்சி மாறுபவர்களுக்கு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்போ அல்லது சீட்டோ வழங்கக் கூடாது எனத் தனது காட்டமான கருத்துகளை வெளிப்படுத்தினார்.
