தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை மாற்றம் மற்றும் கட்சியின் எதிர்கால வளர்ச்சி குறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகின்றன. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், கட்சியின் புதிய தலைவர் மாற்றம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆவதால் அவர்களின் ஆட்சியை விமர்சிக்க இன்னும் காலம் தேவை என்றும், அதேபோல் காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்று 15 நாட்களே ஆவதால் அதற்குள் அவரது செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
தலைவர் பொறுப்பில் நபர்களை மாற்றுவது மட்டுமே கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையான தீர்வாகாது என்பதை கார்த்தி சிதம்பரம் தனது பேட்டியில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். “முன்னர் அழகிரி இருந்தார், பின்னர் செல்வப்பெருந்தகை வந்தார், தற்போது மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்; இவர்களில் தனிப்பட்ட ஒருவரால்தான் கட்சி வளர்ந்தது என்றோ அல்லது வளரவில்லை என்றோ சொல்லிவிட முடியாது” என்று குறிப்பிட்ட அவர், வெறும் முகங்களை மாற்றுவதால் மட்டும் கட்சி வளர்ந்துவிடாது என்று கூறினார். மேலும், கட்சி வளர வேண்டுமானால் அடிப்படையில் சில முக்கியமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதைத் தனது கட்சிக்குள்ளேயே விவாதிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சியைப் பிடித்திருந்தது. எனினும், தனித்து ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சி உடனடியாக தவெகவுக்கு ஆதரவளித்தது. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவளிக்க, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதில் மற்ற கூட்டணிக் கட்சிகள் திமுகவிலிருந்து சுமூகமாக வெளியேறிய நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் திமுக தலைவர்களை நேரில் கூட சந்திக்காமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற பாணியில் கூட்டணியை முறித்துக் கொண்டது அரசியல் அரங்கில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
இந்த அசாதாரணமான அரசியல் சூழலில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்ய, புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். திமுகவுடனான கூட்டணியில் அதிக இடங்களைப் பெற செல்வப்பெருந்தகை முயன்றிருந்தாலும், அதிகாரப் பகிர்வு கேட்டு திமுகவுடன் மல்லுக்கட்டிய மாணிக்கம் தாகூரின் தற்போதைய வருகை காங்கிரஸின் அடுத்தகட்ட நகர்வை நோக்கியே அமைந்துள்ளது. இந்த பின்னணியில், “அடிப்படையில் காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது? எந்த இடத்தை நிரப்புகிறது என்பதை முடிவு செய்வதே கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்” என்ற கார்த்தி சிதம்பரத்தின் கருத்து, காங்கிரஸின் அடுத்தகட்ட வியூகங்களை நோக்கிய விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
