“எங்களை திடீர்னு சுட்டாங்க”…. என் உயிருக்கு ஆபத்து… கர்நாடக காட்டுத் துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பியவர் வெளியிட்ட பகீர் வாக்குமூலம்….!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

கர்நாடக வனப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நான்காவது நபரான மகிமா தாஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அதிகாலை மலையிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, வனத்துறை ஊழியர்கள் தங்கள் மீது திடீரெனத் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். துப்பாக்கிச் சூட்டின் அதிர்ச்சியில் மலையிலிருந்து ஓடித் தப்பியதாகவும், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வனத்துறையினர் தன்னிடம் விசாரணை நடத்தத் தேடி வரக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள மகிமா தாஸ், தனது உயிருக்குக் கடுமையான ஆபத்து இருப்பதால் காவல்துறை உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, காணாமல் போன கால்நடைகளைத் தேடிச் சென்றபோதே இத்துப்பாக்கிச்சூடு நடந்ததாகப் பலியானவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், வேட்டைத் தடுப்பு நடவடிக்கையின் போது தற்காப்பிற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

   

இச்சம்பவம் குறித்து ஏற்கனவே காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை விவரிக்கும் முக்கியச் சாட்சியான மகிமா தாஸின் இந்த பாதுகாப்பு கோரிக்கை வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.