தமிழ் சினிமாவில் கண்ணதாசன் பாடல்கள் எழுதிய காலம் திரையிசைப் பாடல்களின் பொற்காலம் என சொல்லலாம். 50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.
இதில் மற்ற பாடல் ஆசிரியர்களுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வித்தியாசமே கண்ணதாசன் இசையமைப்பாளர் பாடல் மெட்டை சொன்னதுமே வரிகளை மழை போல கொட்டுவார் என்பதுதான். எந்தவொரு மெட்டுக்குமே அவர் வீட்டுக்கு எடுத்து சென்று பாடல் எழுதியதில்லை என்பதுதான். கண்ணதாசனின் பாடல் எழுதும் வேகத்தை இளையராஜா பல மேடைகளில் விதந்தோதி பேசியுள்ளார்.
அதே போல ஒரு பாட்டுக்கு இருபொருள் வரும்படி எழுதுவதும் கண்ணதாசனின் சிறப்பு. அப்படி எத்தனையோ பாடல்களை அவர் எழுதியுள்ளார். இந்நிலையில் கண்ணதாசன் காமராஜருக்கு பாடல் மூலமாகவே அரசியல் தூதுவிட்ட சம்பவமும் நடந்துள்ளது. திமுகவில் இருந்து 1961 ஆம் ஆண்டு விலகினார் கண்ணதாசன். அதன் பின்னர் அவர் மறைமுகமாக காங்கிரஸுக்கு அரசியல் ஆதரவு தெரிவித்து வந்தாலும் அந்த கட்சியில் சேரவில்லை.
இந்நிலையில் 1967 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர் காமராஜர் அணியில் இருக்க விரும்பியுள்ளார். அந்த நேரத்தில் பட்டணத்தில் பூதம் படத்தில் ஒரு பாடல் எழுத வாய்ப்பு வந்த போது அந்த பாடலை தனது தூதாக மாற்ற விரும்பியுள்ளார். அதில் “அந்த சிவகாமி மகனிடம் போய் சொல்லடி… என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி” என ஆரம்பித்துள்ளார்.
இதில் சிவகாமி என்பது காமராஜரின் அம்மாவின் பெயர். இதன் மூலம் தன்னிடம் வந்து பேசுமாறு அவர் காமராஜருக்கு கோரிக்கை வைப்பது போல அந்த காதல் பாடலை எழுதியுள்ளார். அதன் பின்னர் அவர் காமராஜரோடு இணைந்து சில ஆண்டுகள் அரசியலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
