14 நாட்களாகியும் கிடைக்காத துப்பு…. “எங்கே போனார் விஜய் மாமா?”…. 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் கொந்தளித்த கனிமொழி எம்பி…!

By Nanthini on ஐப்பசி 25, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு உறங்கச் சென்ற ஹேமாவதி என்ற ஏழு வயதுச் சிறுமி மறுநாள் மர்மமான முறையில் காணாமல் போனார். உள்ளூர் காவல்துறையினர் 10 நாட்கள் தேடியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் கடந்த 4 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையிலும், 14 நாட்கள் கடந்தும் சிறுமி பற்றிய எந்தவொரு துப்பும் கிடைக்காமல் அவர்கள் திணறி வருகின்றனர்.

சிறுமியைக் கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் மற்றும் அமைதியின்மை குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

   

தமது எக்ஸ் தளப் பதிவில் இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள கனிமொழி எம்.பி., செஞ்சி சிறுமி மாயமான சம்பவம் மட்டுமன்றி, வேளாங்கண்ணி விடுதியில் இரு சிறுமிகளுக்கு நடந்த பாலியல் கொடுமை, சாத்தான்குளத்தில் சிறுமிகள் கடத்தல் மற்றும் சிறுவன் மீது நடத்தப்பட்டத் தாக்குதல், கோவையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவர் தற்கொலை மற்றும் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயதுச் சிறுவன் பலியானது ஆகிய அடுத்தடுத்த துயரச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

இத்தகைய தொடர் சம்பவங்களால் தமிழ்நாடு குழந்தைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?” என்று காட்டமாக வினவியுள்ள அவர், குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாகச் சீரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.