நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வழக்கத்திற்கு மாறாக வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகவே, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்நிகழ்வைப் புறக்கணித்தார்.
இவ்விவகாரம் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழகப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது இதுவே முதல்முறை எனக் குறிப்பிட்ட அவர், “வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?” என்று முன்பு திமுக அரசை விமர்ச்சித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் விஜய் கண்டித்துப் பேசுவாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், விஜய் தரப்பிலிருந்து என்ன மாதிரியான கருத்துகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக, இப்பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற 113 மாணவர்களுக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் மற்றும் மாணவிகள் கண்ணீருடன் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஆளுநரே அனைத்து மாணவர்களுக்கும் பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டதால் அந்த முதன்மைச் சர்ச்சை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
