தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சிவகுமார். இவரின் இயற்பெயர் பழனிச்சாமி. சிவகுமார் கோவையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஓவியக் கல்லூரியில் படித்த் இவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படிப்படியாக வளர்ந்து கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த சிவகுமார் 100 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சிவகுமார் 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நடித்தார். இவரது இளம் வயது தோற்றம் மற்றும் முகம் அப்படியே முருகப்பெருமானின் கதாபாத்திரத்திற்கு வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியது. அதனால் 1967ஆம் ஆண்டு கந்தன் கருணை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார் சிவகுமார்.
அதன் பின்னர் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து பின்னர் தன்னுடைய மகன்கள் சினிமாவில் நடிக்கத் தொடங்கியபின்னர் நடிப்பை முழுக்க முழுக்கக் கைவிட்டார். அதன் பின்னர் கம்பராமாயண உரைகள் நடத்துவது, இளைஞர்களுக்கு உத்வேக உரையாற்றுவது என பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான மெய்யழகன் பட இயக்குனர் பிரேம்குமார் சிவகுமார் பற்றி பேசியுள்ள தகவல் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அதில் “சமீபத்தில் கமல்சாரை சந்திக்கும்போது சொன்னார் ‘சிவக்குமார் அண்ணன் தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார். இதுபோல தொடர்ந்து பேசுபவர்களிடம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவர்களுக்குள் வன்மம் இருக்காது’ என்றார். உள்ளுக்குள் வன்மம் இருப்பவர்கள்தான் எங்கே நம் வார்த்தைகளில் அது வெளிவந்து விடுமோ என்ற அச்சத்தில் குறைவாகப் பேசுவார்கள் என்று கூறினார். எனக்கு அந்த தன்மை மெய்யழகன் கதாபாத்திரத்திடம் இருக்க வேண்டும் எனத் தோன்றியது.” எனப் பேசியுள்ளார்.