1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சீக்கிரமே உயிரிழக்கப் போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக அவருக்கு நோயாளி போன்ற டல்லான மேக்கப் போடப்பட்டிருக்கும். அந்த படத்தில் ரஜினியின் லுக் எப்படி இருக்க வேண்டும் என்பது கமல் கொடித்த ஐடியாவாம்.
இதுபற்றி கமல் ஒரு நேர்காணலில் பேசும்போது “என்னுடைய குடும்ப நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் கோவிந்தராஜன். ஆனால் அவரை நாங்கள் கோவிந்த ஹாசன் என்றுதான் கூப்பிடுவோம். அந்தளவுக்கு அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டார்.
அவர் திடீரென ஒரு நாள் வந்து தனக்கு கேன்சர் இருப்பதாக சொன்னார். நான் அப்போது இளமை பருவத்தில் இருந்ததால் என்னால் மரணத்தை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரியவில்லை. அப்போது நான் பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தில் ஒரு சிறப்புத்தோற்றத்தில் நடிக்க சிவாஜி ராவ் என்ற இளைஞர் தேர்வாகி இருந்தார்.
நான் என்னுடைய மேக்கப் மேனிடம் கோவிந்தஹாசன் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் படத்தில் கேன்சரால் இறக்கும் ரஜினியின் கதாபாத்திரத்துக்கு, கோவிந்தஹாசன் போலவே மேக்கப் போட்டுவிட்டார். இதை ஒருநாள் ஷூட்டிங்கில் பார்த்த கோவிந்தராஜன் “யார் அந்த பையன் என்னைப் போலவே இருக்கிறான். எனக்கு அவனை பிடித்திருக்கிறது” என்றார். அவரிடம் நான் ரஜினி நடிக்கும் கதாபாத்திரம் பற்றி சொல்லவேயில்லை.
எப்படியோ என் மனதுக்குள் ரஜினிகாந்தின் உருவன் கோவிந்தராஜன் பிம்பத்தோடு சேர்ந்து பதிவாகி விட்டது. இதெல்லாம் கூட அவர் மேல் நான் அன்பாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்” என தனக்கும் ரஜினிக்கும் இடையிலான நட்பு குறித்து அதில் பேசியுள்ளார் கமல்ஹாசன்.