தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ் சினிமாவின் பெருமை என சொல்லப்படும் மாயா பஜார் திரைப்படத்தில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதன் பின்னர் இயக்குனர் ஆகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய படங்களில் அவர் கமல்ஹாசனுடன் இணைந்த படங்கள் இன்றளவும் பாராட்டப்படும் படமாக உள்ளன. அவர்கள் இணைந்து பணியாற்றிய ராஜ பார்வை, பேசும்படம், அபூர்வ சகோதரர்கள் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் சமீபத்தில் திரையிடப்பட்டு அவரைக் கௌரவப்படுத்தினார் கமல்ஹாசன்.

அதில் சிங்கீதம் சீனிவாச ராவ் பற்றி பலரும் பல தகவல்களைப் பகிர்ந்தனர். அதில் கமல்ஹாசன் பகிர்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பலரையும் வாய்விட்டு சிரிக்கவைத்தது.
அதில் “சிங்கீதம் சாரை யாராலுமே கோபப்படுத்த முடியாது. அவரை யாராவது கண்டபடி வந்து திட்டினாலும், அவர் பொறுமையாக அவர் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார். அவர்கள் பேசி முடித்துவிட்டு என்ன பதிலே சொல்லாமல் நிற்கிறாய் என்பது போல பார்த்தால் ‘நீங்கள் சொன்னது எனக்கு சரியாக புரியவில்லை. இன்னொரு தடவை திட்டுங்கள். புரிகிறதா பார்ப்போம்’ என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்வார்.
அதைக் கேட்டால் அவரைத் திட்டியவருக்கே சிரிப்பு வந்துவிடும். இப்படிதான் அவர் மற்றவர்களிடம் வேலை வாங்குவார்” எனக் கூறியுள்ளார். தற்போது 90 வயதுக்கு மேல் ஆகும் சிங்கீதம் அவர்கள் விரைவில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அந்த மேடையிலேயே கூறியிருந்தார்.
