தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

#image_title
அதே போல கமல்ஹாசன் வெறுமனே நடிப்போடு தன்னை குறுக்கிக் கொள்ளாமல் திரைக்கதை, இயக்கம், பாடல் எழுதுதல், பாடுதல் மற்றும் படங்கள் தயாரித்தல் என பலதளங்களில் விரிவாக இயங்கியுள்ளார். அதே போலவே திரைக்கு வெளியிலும் பகுத்தறிவு பேசுதல் மற்றும் முற்போக்கான செயல்களில் ஈடுபடுதல் என அவர் தனித்துவத்தோடு இயங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுக்கும் ரசிகர் மன்றங்கள் உண்டு. ஆனால் இப்படி அவர்கள் தனக்கு ரசிகர்களாக மட்டும் இருப்பதால் என்ன பயன். இத்தனை பேர் ஒன்றாக இணையும் போது அவர்களை வைத்து எதாவது நற்காரியம் செய்யவேண்டுமே என யோசித்த தன்னுடைய ரசிகர் மன்றங்களை எல்லாம் கமல் நற்பணி மன்றம் என மாற்றினார்.
நற்பணி மன்றங்கள் மூலம் ரத்த தானம் செய்தல் உள்ளிட்ட நற்காரியங்களை அவர்களை செய்யவைத்தார். அதே போல தானும் ரத்த தான முகாம்களில் கலந்துகொண்டார். இதன் மூலம் ரசிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தார்.
