தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இவரது வெற்றிப்படங்கள் மட்டுமின்றி, தோல்வி அடைந்த படங்களும்கூட நல்ல வசூலைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. திரையுலகில் மட்டுமின்றி, அரசியலிலும் அவர் கொடிகட்டிப் பறந்தார். எம்.ஜி.ஆர் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில், கமல்ஹாசன் இளம் வயதில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் 1975 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாளை நமதே’. கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், பிரிந்துபோன அண்ணன்-தம்பிகள் இணைந்து வில்லன்களைப் பழிவாங்கும் மையக்கருவைக் கொண்டது. இது 1973ஆம் ஆண்டு வெளியான ‘யாதோன் கி பாரத்’ என்ற இந்திப் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பி கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க யோசித்துள்ளனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் கமல்ஹாசன் மலையாளத் திரைப்படம் ஒன்றில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாம். இந்தப் பொன்னான வாய்ப்பை இழந்தது குறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
