இந்தியா, மத்திய பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக கல்வீசும் கோட்மார் என்னும் திருவிழா பந்தூர்னா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதன் பேரில் நேற்று கோட்மார் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஜாம் ஆற்றின் இருபுறத்திலும் உள்ள பாண்டுர்னா மற்றும் சவர்காண் கிராமத்தை சேர்ந்தவர்கள். இத்திருவிழா கோலாகலமாக ஆரம்பித்தது பாரம்பரியம்படி சவர்கான் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் காவ்லே என்பவரின் குடும்பத்தார் பலாஸ் மரம் ஒன்றை கொண்டு வந்து ஆற்றில் நட்டு கொடியேற்றினர்.
அதன் பிறகு சாண்டி மாத கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் திருவிழா தொடங்கியது. பாண்டுர்னா மக்கள் கொடியை அகற்றவரச் சமர்காண் கிராம மக்கள் கல்வீச தொடங்கினர். இரு கிராமமும் மாறி மாறி கல்வீசி தாக்கியதில் 934 பேர் காயமடைந்துள்ளனர், 10 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, இருவருக்கு கை கால் உடைந்துள்ளது. இத்திருவிழாவில் 58 மருத்துவர்கள் 200 மருத்துவ ஊழியர்கள் அடங்கிய 12 மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. ட்ரெயின்கள் மூலம் திருவிழாவை கண்காணிக்க 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிந்துள்ளனர். இந்த விசித்திரமான திருவிழாவை பார்க்க பல ஊர்களில் இருந்து பல்லாயிரம் மக்கள் வந்துள்ளனர் வீடுகளின் மாடியில் ஏறி திருவிழாவை பார்த்து ரசித்தனர்.
1995 முதல் 2023 வரை 13 பேர் உயிரிழந்து உள்ளனர். அதில் மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாம். இது மட்டும் இல்லாமல் பலரும் கை கால்களை இழந்துள்ளனர் மற்றும் பல்லாயிரம் பேர் பார்வையையும் இழந்துள்ளனர். இப்படிப்பட்ட விசித்திரமான திருவிழாவிற்கு ஒரு வரலாறு உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சவர்காண் கிராமத்தை சேர்ந்த பெண்ணும் பாண்டுர்னா கிராமத்து இளைஞனும் காதலித்து ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டு ஜாம் ஆற்றின் வழியே இருவரும் தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்து வந்த சவர்காண் கிராம மக்கள் கற்களை வீசி அவர்களை அடிக்க முயன்றுள்ளனர். பின்னர் பாண்டுர்னா கிராம மக்களும் கல்வீச ஆரம்பித்து இருவரையும் கல்லால் அடித்தே கொன்றுள்ளனர். அவர்கள் இறந்ததை அவமானமாக கருதி சாண்டி கோவிலின் முன் வைத்து பூஜை செய்து, பின்னர் தகனம் செய்துள்ளனர். அவர்களின் நினைவாக அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக இந்த கல்வீசும் கோட்மார் திருவிழா நடைபெற்று வருகிறது.
