“எங்கிட்ட 300 ஓட்டு இருக்கு”… விசிக வேட்பாளரை காலில் விழவைத்த காங்கிரஸ் நிர்வாகி… கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த பகீர் சம்பவம்….!

By Nanthini on சித்திரை 13, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே அடிமட்ட அளவில் நிலவும் பூசல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மாலதி, பிரசாரத்தின் போது காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் மாலதியை, அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு முறையான தகவல் தெரிவிக்காமல் கிராமத்திற்குள் நுழைந்ததாகக் கூறி ஆக்ரோஷமாகச் சண்டையிட்ட அந்த நிர்வாகி, “எனக்கு என்ன மரியாதை இருக்கிறது? என்னால் இங்குள்ள 300 வாக்குகளைப் பெற்றுத் தர முடியும்” என்று ஒருமையில் பேசி மிரட்டும் தொனியில் அதிகாரத்தைக் காட்டியது காண்போரைக் கண்கலங்க வைத்தது.

   

இந்தச் சூழலைச் சமாளிக்க முயன்ற வேட்பாளர் மாலதி, கூட்டணியின் ஒற்றுமை கருதி “அண்ணன்.. அண்ணன்..” என்று பணிவுடன் கெஞ்சியதோடு, சற்றும் எதிர்பாராத விதமாக அந்த நிர்வாகியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். ஒரு பெண் வேட்பாளர் பொதுவெளியில் இவ்வாறு அவமதிக்கப்பட்ட பிறகும், அந்த நிர்வாகியின் கோபம் தணியாமல் தொடர்ந்து ஆக்ரோஷம் காட்டியது அங்கிருந்தவர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது. தனது மேலாதிக்க மனப்பான்மையால் ஒரு வேட்பாளரை மண்டியிட வைத்த செயல் கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.

   

மேடை நாகரிகத்திற்காகத் தலைவர்கள் கைகோர்த்து நின்றாலும், கள யதார்த்தத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் இருக்கும் வன்மமும், “பண்ணையார்” தனமும் இச்சம்பவத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. சமூக நீதி பேசும் ஒரு கூட்டணியில், பட்டியலினப் பெண் வேட்பாளர் ஒருவருக்கு நேர்ந்த இந்த அவமரியாதை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது தேர்தலின் போது அக்கூட்டணிக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.