BREAKING: இன்று அதிமுகவில் ஐக்கியம்…. முக்கிய தொகுதியில் போட்டியிடும் காளியம்மாள்… அதிரும் தமிழக அரசியல் களம்….!

By Nanthini on தை 21, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நட்சத்திரப் பேச்சாளரான காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து நீண்ட நாட்களாக மௌனம் காத்து வந்தார். இடையில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, காளியம்மாளைத் தனியாக ஒரு அமைப்பைத் தொடங்கச் செய்து, அதனைத் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாஜக மேலிடம் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கேற்ப அவர் நாகப்பட்டினம் பகுதியில் பெண்களைத் திரட்டி வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசியலில் ஒரு திடீர் திருப்பமாக, புதிய கட்சி தொடங்கும் முடிவைக் காளியம்மாள் கைவிட்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜக தரப்பில் நாகப்பட்டினம் தொகுதி மற்றும் முக்கியப் பதவிகள் குறித்துப் பேசப்பட்ட போதிலும், தற்போது நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அவர் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அவர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

   

இந்த அரசியல் மாற்றத்தின் இறுதி முடிவாக, காளியம்மாள் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தூத்துக்குடியில் போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது. கல்யாண சுந்தரத்தை தொடர்ந்து நாதகவின் மற்றொரு முகமான காளியம்மாள் அதிமுகவில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சீமான் மற்றும் அண்ணாமலை ஆகியோரின் அரசியலைத் தீவிரமாக விமர்சித்து வந்த காளியம்மாள், இப்போது இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைவது அக்கட்சிக்குக் கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.