தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு 45 நாட்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜூலை 15ஆம் தேதி இந்த முகாம் தொடங்கப்பட்ட நிலையில் பலரும் விண்ணப்பித்துள்ளனர். இன்றுடன் 45 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில் யார் யாருக்கு பணம் கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பை இன்று வெளியாகும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.
