மகளிர் உரிமைத்தொகை… 13.72 லட்சம் பேர் விண்ணப்பம்… இம்மாதம் இறுதிக்குள் வருகிறது அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 17, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 15 முதல் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை 13 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசீலனை முடிந்த பிறகு இந்த மாதம் இறுதியில் விண்ணப்பித்தவர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.