ஆந்திரப்பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம், துனி சி.எச். அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான பாமாயில் தோட்டத்தில், சுங்கரா கணேஷ் – பவானி தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் பண்ணை வீட்டில் தங்கி காவல் காத்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் 7-ஆம் தேதி இவர்களது மூத்த மகள் ஜானவி திடீரென காணாமல் போனார். சம்பவத்தன்று தந்தை கணேஷ் தோட்டத்திற்குச் செல்ல முயன்றபோது, அவருடன் வர வேண்டி குழந்தை அழுதுள்ளது. குழந்தையை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் விட்டுவிட்டு தந்தை சென்ற சில நிமிடங்களிலேயே, ஜானவியும் அவர்களது வளர்ப்பு நாய் டாமியும் அவர் பின்னாடியே சென்று அடர்ந்த தோட்டத்திற்குள் மாயமாகியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
குழந்தை காணாமல் போனதைத் தொடர்ந்து, காவல்துறையினர், மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் இணைந்து 50 ஏக்கர் பாமாயில் தோட்டம் மற்றும் அதை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகள், பள்ளத்தாக்குகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நவீன ட்ரோன் கேமராக்கள் மூலம் சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும், சிறுமியைப் பற்றிய எந்தவொரு துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த ஊடகங்களும் அங்கு குவிந்துள்ள நிலையில், சிறுமி பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். எனினும், தேடுதல் பணி தொடங்கி 8 நாட்களுக்கு மேலாகியும் சிறுமி கிடைக்காதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சிறுமியுடன் காணாமல் போன வளர்ப்பு நாய் டாமி, இரண்டு நாட்களுக்கு முன்பு மிகவும் சோர்வடைந்த நிலையில் தானாகவே வீட்டிற்குத் திரும்பியது. தன் குழந்தையைப் பற்றி கேட்க நினைத்த தாய் பவானி, நாயின் நிலையைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார். இதையடுத்து, நாயின் உடலில் ஜி.பி.எஸ் (GPS) டிராக்கர் கருவியைப் பொருத்தி, அதன் மூலம் சிறுமி இருக்கும் இடத்தை அறிய காவல்துறையினர் திட்டமிட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மிகக் கடுமையான உடல்நலக் குறைவால் நாய் டாமி பரிதாபமாக உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து நாயின் உடலுக்கு பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிறுமி ஜானவியின் பெற்றோர் தங்களது மகளை இழந்து வீட்டின் அருகே அழுதுகொண்டிருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்போரின் நெஞ்சைக் உலுக்குவதாக உள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இந்தச் சம்பவம் குறித்துப் பலரும் பதிவிட்டு வரும் வேளையில், சிசிடிவி காட்சிகளை வைத்து சிலர் பொய்யான வதந்திகளையும் பரப்பி வருவது தங்களுக்குக் கூடுதல் வேதனையை அளிப்பதாகச் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அனைத்து வழிகளிலும் துணை நின்று, சிறுமியை எப்படியாவது மீட்கப் போராடுவோம் என்று ஆந்திர அரசு உறுதியளித்துள்ளது.
