நடிகர் பிரபு தேவா டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் பிரபுதேவா கலக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த 1989-ஆம் ஆண்டு ரிலீசான இந்து திரைப்படத்தின் மூலம் பிரபுதேவா கதாநாயகனாக அறிமுகமானார். இதில் அவருக்கு ஜோடியாக ரோஜா நடித்தார்.
![]()
இவர் போக்கிரி, வில்லு போன்ற தமிழ் திரைப்படங்களையும், இந்தி திரைப்படங்களையும் இயக்கி இயக்குனராகவும் வலம் வந்தார். இவரது படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் சரண் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு பிரபுதேவா உடன் ஜோடியாக நடித்த கஜோல் தான் இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

பிரபுதேவாவும் கஜோல் இணைந்து மின்சார கனவு படத்தில் இணைந்து நடித்தனர். மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே பாடலில் தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினார். இதற்காக பிரபுதேவாவுக்கு சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

மீண்டும் பிரபுதேவாவும், கஜோலும் இணைந்து நடிக்க உள்ள ஹிந்தி படத்தில் நஸ்ருதீன் ஷா, சம்யுக்தா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இயக்குனர் அட்லியுடன் இணைந்து பல திரைப்படங்களில் வேலை பார்த்த ஜி கே விஷ்ணு பிரபுதேவா நடிக்க உள்ள திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். புஷ்பா 2 திரைப்படத்தின் எடிட்டர் நவீன் இந்த படத்தில் இணைந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் உருவாகிறது.

