தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் இன்று நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முக்கியப் பட்டியலில் முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் கோவிந்தசாமி உள்ளிட்ட 5 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் (எம்.எல்.ஏ) தவெகவில் இணையவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு முறைப்படி சென்று, இவர்கள் அனைவரும் தங்களை விஜய்யின் அரசியல் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தவெக, தற்போது பிற கட்சிகளின் மூத்த தலைவர்களைத் தன் பக்கம் இழுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, அதிமுகவின் இந்த முக்கியக் தூண்களாகக் கருதப்பட்ட தலைவர்கள் தவெக நோக்கி நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஒரே நேரத்தில் இத்தனை முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எல்.எல்.ஏ-க்களும் கட்சியை விட்டு வெளியேறுவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வரும் வேளையில், கட்சியின் இந்த திடீர் பிளவு மற்றும் முக்கிய நிர்வாகிகளின் அசுர வேக இடமாற்றம் அதிமுகவின் பலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், இபிஎஸ்-ஸின் தலைமைத்துவத்திற்கு ஒரு கடுமையான சவாலாகவும் உருவெடுத்துள்ளது.
