தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வரவேண்டியவர். ஆனால் தன்னுடைய இளமைக் காலத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் முதுமையில் கவனிக்கப்பட்டவர் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன். சிவாஜி கணேசன் நாடகத்தில் சிறுவனாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரின் பால்ய சினேகிதராக இருந்தவர்தான் ராதாகிருஷ்ணன்.
அவரிடம் யாரோ சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் காக்கா பிடிக்க வேண்டும் சொல்ல, அதை தவறாகப் புரிந்துகொண்ட ராதாகிருஷ்ணன், நிஜமாகவே ஒரு காக்காவைப் பிடித்துக் கொண்டு ஸ்டுடியோவுக்குள் சென்றுவிட்டார். அதைப் பார்த்து அன்று அனைவரும் சிரிக்க, அதுவே அவரின் பெயராக நிலைத்துவிட்டது.
சிவாஜி கதாநாயகன் ஆனபோதும் ராதாகிருஷ்ணனுக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மனோகரா மற்றும் மாலையிட்ட மங்கை ஆகிய திரைப்படங்களில் தலைகாட்டினார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. அதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் நடிகர் சங்கத் தேர்தல் நடந்தபோது அவரை எதிர்த்து நாடக நடிகரான ராதாகிருஷ்ணன் நின்றுதும் ஒன்று என சொல்லப்படுகிறது.
இப்படி தன் இளமைக் காலம் முழுவதும் சினிமா வாய்ப்புக் கிடைக்காமல் தனது முதுமையில் தேவர் மகன் படம் மூலமாக திருப்புமுனையைப் பெற்றார். அந்த படத்தில் சிவாஜிக்கு தம்பியாக நடித்திருந்தார் காக்கா ராதாகிருஷ்ணன். அதன் பிறகு பிஸியான நடிகராக காதலுக்கு மரியாதை, உனக்காக எல்லாம் உனக்காக மற்றும் வசூல்ராஜா எம் பி பி எஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.
இவரின் சம வயதினராகவும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் இருந்த நாகேஷ் ஒருமுறை காக்கா ராதாகிருஷ்ணன் பற்றி பேசும்போது “இவனுக்கு மட்டும் நேரம் சரியாக அமைந்திருந்தால் என்னையே மிஞ்சும் காமெடியனாக ஆகியிருப்பான்” என சொன்னாராம். ஆனால் நேரம்தான் அமையவில்லையே!